பெங்களூரில் பெண் காவலர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் கான்ஸ்டபிளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெங்களூர் ஜனனபாரதி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் சந்திரசேகர் என்பரும் பெண் காவலர் ஒருவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு அடிக்கடி சந்திரசேகர் அந்தப் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணின் விருப்பமில்லாமல் அவரது தொடர்பு எண்ணை கைப்பற்றி தினமும் போன் செய்து தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சந்திரசேகர் அந்தப் பெண் காவலரிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து பெண் காவலர் தனது உயரதிகாரி கிரிஜாவிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சந்திரசேகருக்கு போலீஸ் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் சனிக்கிழமை இரவு பெண் காவலரின் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நள்ளிரவில் வீட்டிற்கு வந்த கணவரிடம் அந்தப் பெண் காவலர் நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கான்ஸ்டபிள் சந்திரசேகரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.