ராமேஸ்வரம் கபே, என்.ஐ.ஏ.
ராமேஸ்வரம் கபே, என்.ஐ.ஏ. ட்விட்டர்
இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு: சிறையில் இருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.. களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ.!

Prakash J

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் பிரபல ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பெங்களூரு குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் மர்ம நபர் பற்றிய புகைப்படத்தை என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. மேலும் அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கும் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக, சிறையில் அடைக்கப்பட்ட 4 பயங்கரவாத சந்தேக நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்காக இன்று காவலில் எடுத்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்கில் மினாஸ் என்கிற சுலைமான், சையத் சமீர், அனஸ் இக்பால் ஷேக் மற்றும் ஷான் ரெஹாமான் ஆகியோரை என்ஐஏ கைது செய்துள்ளது. சிறப்பு NIA நீதிமன்றம், மேற்கண்ட நான்கு நபர்களின் தொடர்புகளை விசாரிக்க மார்ச் 9 வரை காவலில் வைக்க ஏஜென்சிக்கு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 18ஆம் தேதி, கர்நாடகாவில் 11 இடங்களிலும், ஜார்க்கண்டில் 4 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும், டெல்லியில் 1 இடத்திலும் என மொத்தம் 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போதுதான் 15 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இதில் இன்று விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டிருக்கும் மினாஸ் பல்லாரி பகுதியில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (PFI) தலைவராக இருந்தவர் என விசாரணையில் தெரிய வந்தது.

சையத் சமீர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவரே. மேலும் விசாரணை வளையத்தில் இருக்கும் அனஸ் இக்பால் ஷேக் மும்பையைச் சேர்ந்தவர். ஷான் ரெஹாமான் டெல்லியைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுலைமான் என்ற மினாஸ் யார்?

26 வயதுடைய சுலைமான் என்கிற மினாஸ் பல்லாரி பகுதியில் உள்ள கவுல் பஜாரில், தன் பெற்றோருக்கு உதவியாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மூத்த சகோதரர் கோவாவில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு ஒரு விபத்தை ஏற்படுத்திய பின்னர், இங்கே வந்து பெற்றோருடன் சேர்ந்து அவரும் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மினாஸின் சகோதரி தற்போது துமகுருவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த மார்ச் 1ஆம் நடைபெற்ற குண்டுவெடிப்புக்குப் பிறகு, ராமேஸ்வரம் கபே இன்றுமுதல் திறக்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.