கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்குத் தொகுதி பாஜக எம்பியாக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், இவர்களுடைய திருமணம், பெங்களூருவில் இன்று எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா, பி.ஒய்.விஜயேந்திரா, மத்திய அமைச்சர் வி.சோமன்னா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார். மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவரது இன்ஸ்டா பக்கத்தை 1.13 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். ’பொன்னியின் செல்வன் 2’ஆம் பாகத்தில் ஒரு பாடல் பாடியதன் மூலம் மிகவும் பிரபல பின்னணிப் பாடகியாக அறியப்படுகிறார். அதுபோல் இரண்டு முறை பாஜக எம்பியாக இருக்கும் தேஜஸ்வி சூர்யா, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவராகவும் உள்ளார்.