செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. இங்குள்ள மக்கள் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் சிக்கித் தவித்து வருகின்றனர். ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பணிக்கு தாமதமாக செல்லக் கூடாது என்பதற்காக இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் இளைஞர் ஒருவர் தன்னைத்தானே, தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
அதில், ஓலா, உபர் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது என்றும். போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட உடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.