இந்தியா

பெங்களூர் “காட்பாதர்” முத்தப்பா ராய் உயிரிழப்பு

webteam

பெங்களூரில் காட்பாதராக வலம் வந்த முத்தப்பா ராய், புற்றுநோயால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மங்களூரைச் சேர்ந்தவர் முத்தப்பா ராய்(68). வங்கிப் பணியாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர், கூலிப்படை கொலைகள், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று நிழல் உலக தாதாவாக திகழ்ந்து வந்தார்.

1996-ல் தாதா வாழ்க்கையில் இருந்து விலகிய அவர், சொத்து, சம்பாதித்த மொத்த பணத்துடன் துபாய்க்கு இடம்பெயர்ந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு பழைய வழக்குகளில் கர்நாடக போலீசார், அவரை துபாயில் இருந்து நாடு கடத்தினர். அப்போது, சிபிஐ, ரா, ஐபி மற்றும் கர்நாடக போலீசார் என பலரும் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் அத்தனை வழக்குகளில் இருந்தும் ஆதாரம் இல்லாததால் மீண்டு வெளியே வந்தார்.

இதனை அடுத்து, ஜெய கர்நாடகா என்ற அமைப்பை தொடங்கி, அரசியல் இயக்கமாக்கினார். இந்நிலையில், முத்தப்பா ராய், கேன்சாரால் கடந்த ஒரு வருடமாக அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானார். இவரது வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, சினிமாவாக எடுக்கிறார். இதில் நடிகர் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெங்களூரு, மங்களூரு, மும்பை, துபாய் மற்றும் லண்டனில் படமாக்கப்பட்டது.

புற்றுநோயைக் கண்டறிந்த பின்னர், ராய் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். மேலும், ஜெய கர்நாடகாவை அமைப்பை கலைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.