பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஏழே மாதங்களில் அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார் பிரபல நடிகை ஒருவர்.
பெங்காலி சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி. இவர் கடந்த ஏழு மாதங்கள் முன் பாஜகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்த அவர், தேர்தலில் போட்டியிடவும் செய்தார். அதில் தோற்றுவிட்டாலும் கட்சியில் தீவிரமாக இருந்தவர் இன்று, " பாஜகவுடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்காக உழைத்தேன். ஆனால், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், இனி எனக்கும் பாஜகவுக்கு எந்த உறவுமில்லை" என்று டுவீட் செய்தார்.
நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். முன்னதாக டுவிட்டரில் ஒரு பயனர், ஸ்ரபந்தி சாட்டர்ஜியிடம் திரிணாமுல் காங்கிரஸில் இணைவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கொடுத்த நடிகை ஸ்ரபந்தி, ``காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனிடையே, பாஜக துணைத் தலைவராக இருந்த முகுல் ராய் உட்பட பல அரசியல்வாதிகள், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சந்தித்த தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறி திரிணாமுல் கட்சியில் ஐக்கியமாகினர்.
தொடர்புடைய செய்தி: தேர்தல் பின்னடைவு முதல் புதிய வியூகம் வரை - பாஜக செயற்குழுக் கூட்டம் கவனிக்கப்படுவது ஏன்?
பிஸ்வஜித் தாஸ், தன்மோய் கோஷ், சவுமன் ராய் ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் கடந்த ஒரு மாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்கள். இந்த நிலையில் நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப அவரின் பதிலும் வெளிவந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. இதையடுத்து பாஜக முகாமில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலையில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.