இந்தியா

பாடப் புத்தகத்தில் மில்கா சிங்குக்கு பதில் ஹீரோ படம்: வெடிக்கும் சர்ச்சை!

பாடப் புத்தகத்தில் மில்கா சிங்குக்கு பதில் ஹீரோ படம்: வெடிக்கும் சர்ச்சை!

webteam

ஓட்டப் பந்தய வீரர் மில்கா சிங்கின் புகைப்படத்துக்குப் பதிலாக, அவரது கதையை கொண்ட சினிமாவில் நடித்த நடிகரின் புகைப்படம் மேற்கு வங்க மாநில பாட புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

’பறக்கும் சீக்கியர்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங். காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்தியர் இவர். இவரது வாழ்க்கை கதை, ’பாக் மில்க் பாக்’ (ஓடு மில்கா ஓடு) என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டது. ஃபர்ஹான் அக்தர், சோனம் கபூர், திவ்யா தத்தா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில பள்ளிப் பாடப் புத்தகத்தில், மில்கா சிங் தொடர்பான கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதில் மில்கா சிங் புகைப்படத்துக்குப் பதிலாக அவரது படத்தில் நடித்த ஃபர்ஹான் அக்தரின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தவறை சுட்டிக்காட்டிய ஃபர்ஹான் அக்தர், அதை சரி செய்யும்படி மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பார்தா சட்டர்ஜிக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ’பெரும் தவறு வெளிப்படையாக நடந்துள்ளது. மில்காஜியின் புகைப்படத்துக்கு பதிலாக எனது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தை பதிப்பித்தவர்களிடம் அதை மாற்றி பதிப்பிக்கச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டுள்ளார். 

அதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் டேரக் ஓ பிரையனுக்கும் டேக் செய்திருந்தார். அவர் கூறும்போது, ‘தனியார் பதிப்பகம் அப்படி பதிப்பித்திருக்கிறது. மாநில பள்ளிக்கல்வித் துறை அந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது’ என்றார். 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.