இந்தியா

கிரண்பேடியை எதிர்த்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இளைஞர்கள்

கிரண்பேடியை எதிர்த்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இளைஞர்கள்

webteam

காவலர் தேர்வுக்கான வயது வரம்பு தளர்த்துவதற்கு தடையாக உள்ள ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பட்டதாரி வாலிபர்கள் நகரின் முக்கிய வீதியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடம் நிரப்ப உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் வயது வரம்பு 22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை 24 வயதாக நீடிக்க வேண்டும் என்று மாணவர் கூட்டமைப்பினர் மற்றும் பட்டதாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிரண்பேடி கிடப்பில் போட்டு உள்ளதால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என அரசு தரப்பில் சொல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

இந்த நிலையில் பட்டதாரி இளைஞர்களின் வேலை வாய்ப்பைத் தடுக்கும் துணை நிலை ஆளுநரின் தவறான நடைமுறையை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் விதமாகவும், பட்டதாரி இளைஞர்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலையில் இருந்து தட்டு ஏந்தி ஊர்வலமாக நகரின் முக்கிய வணிக அங்காடிகள் இருக்கும் நேரு வீதியில் இப்போராட்டம் நடைபெற்றது.

இதன் பின்னும் ஆளுநர் கிரண்பேடி தனது நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஆளுநர் மாளிகை முன்பு தொடர்போராட்டமும் அடக்கு முறையை ஏவிவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.