இந்தியா

பிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..!

பிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..!

Rasus

பிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமாகாது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகும் என மும்பை பிச்சை தடுப்பு சட்டத்தை 1959-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு கொண்டுவந்தது. இந்த நடைமுறையே டெல்லியிலும் பின்பற்றப்பட்டு வந்தது. இதனிடையே பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், பிச்சை எடுத்தால் அதனை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றம் என்பது மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் தனிமனித உரிமையை மீறும் வகையில் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. பிச்சை எடுத்தலை கிரிமினல் குற்றமாக கருதுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்விற்கு அத்தியாவசியமானவகளை வழங்க தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேசமயம் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களை தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் மாநில அரசு தேவையான சட்டத்தை இயற்றலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஆகியவற்றறை அரசு அளிக்காத நிலையில் பிச்சை எடுத்தலை மட்டும் கிரிமினல் குற்றமாக எப்படி கருத முடியும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.