இந்தியா

பிச்சை எடுப்பவரின் பையில் இருந்த ரூ.2.58 லட்சம்: ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஊழியர்கள் வியப்பு

பிச்சை எடுப்பவரின் பையில் இருந்த ரூ.2.58 லட்சம்: ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஊழியர்கள் வியப்பு

JustinDurai

பிச்சைக்காரர்களின் ஆக்கிரமிப்பை அகற்றியபோது அங்கிருந்த ஒரு பையில் ரூ.2.58 லட்சம் பணம் இருப்பதை கண்ட நகராட்சி ஊழியர்கள் அதனை போலீசில் ஒப்படைத்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களையும், சாலையோரங்களில் வசிக்கும் வீடற்ற ஆதரவற்றோரையும் மீட்டு அரசின் தங்குமிடத்திற்கு மாற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அப்படித்தான் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை மருத்துவமனைக்கு வெளியே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் அரசு தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து அந்த இடத்தில் பிச்சைக்காரர்கள் பயன்படுத்திய பொருட்கள், தற்காலிக குடிசைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்து வந்தனர். அப்போது ஒரு பாலிதீன் பையில் கனமாக ஏதோ இருப்பதை பார்த்த ஊழியர்கள் அந்த பையை திறந்துப் பார்த்தனர். அந்த பையில் நிறைய நாணயங்களும், கட்டுக்கட்டாக ரூபாய் தாள்களும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த ஊழியர்கள் அதனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அதனை மீட்டு சில்லறைகள், ரூபாய் தாள்களை எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 507 ரூபாய் இருப்பது தெரியவந்தது. 

இந்த இடத்தில்  பெண் ஒருவர் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தததாக அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பணத்தை நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்களை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.