கேரளாவில் ஒரு கடையில் மாட்டு இறைச்சி காலியானதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது மூளமட்டும் பகுதி. இங்கு சாலையோரத்தில் உள்ள ஒரு கையேந்தி பவனுக்கு மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்று இரவு வந்துள்ளனர். மது அருந்தியிருந்த அவர்கள், சாப்பிடுவதற்கு மாட்டு இறைச்சி கேட்டுள்ளனர். ஆனால், கடையில் இருந்த ஊழியர் மாட்டு இறைச்சி காலியாகி விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கடை உரிமையாளர், அங்கு வேலை செய்பவர்கள் என அனைவரையும் தகாத வார்த்தைகளில் திட்டி தகராறு செய்துள்ளனர். இதையடுத்து, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், அந்த இளைஞர்களை தட்டிக் கேட்கவே அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட அந்த இளைஞர்கள், சிறிது நேரத்தில் ஒரு காரில் அந்தக் கடைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர், காருக்குள் இருந்தபடி கடையில் இருந்தவர்களை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில், கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பேருந்து நடத்துனர் சானல் பாபு (32) கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், அந்த இளைஞர்களை துரத்தி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், துப்பாக்கியால் சுட்டது அதே பகுதியை சேர்ந்த பிலிப் மார்ட்டின் (26) என்பது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.