இந்தியா

“குறைகளை கேட்காத அரசு அதிகாரிகளை மூங்கில் தடியால் அடிக்கவும்” - மத்திய அமைச்சர் பேச்சு

EllusamyKarthik

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் மக்களவை தொகுதியில் உறுப்பினராக கடந்த 2019 தேர்தலில் தேர்வானவர் பாஜகவின் கிரிராஜ் சிங். தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசில் மத்திய மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் தனது தொகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர் உங்களது குறைகளை காது கொடுத்து கேட்காத அரசு அதிகாரிகளை மூங்கில் தடியால் அடிக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.  அவரது சர்ச்சை பேச்சு கேமராவிலும் பதிவாகியுள்ளது. 

“பொது மக்களின் புகார்களை அரசு அதிகாரிகள் கேட்பதில்லை என்ற புகார்கள் எனக்கு வருகின்றன. இந்த சின்ன பிரச்னைகளை எல்லாம் எனது கவனத்திற்கு எடுத்து வராதீர்கள். மக்களுக்கு சேவை செய்ய தான் மக்களால் தேர்வு செய்யப்பட மக்களவை உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களது குறைகளை காது கொடுத்து கேட்காத பட்சத்தில் அவர்களை மூங்கில் தடியால் தலையிலேயே அடிக்கவும். அதற்கும் அவர்கள் மசியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் கிரிராஜ்  சிங் மக்களிடையே அரசு அதிகாரிகள் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இப்படி சொல்லியிருக்கலாம். அதை  நாம் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது என பீகார் பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.