இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக புதன்கிழமை அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் வந்துள்ளார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொண்டனர். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கங்குலியின் இதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாய்களில் இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.