இந்தியா

முடிவுக்கு வந்த வருமான வரி ஆய்வு - பிபிசி நிறுவனத்தின் விளக்கம் என்ன?

webteam
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிபிசியின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில்  நடைபெற்ற வருமான வரி ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. இந்த மூன்று நாள் வருமான வரி ஆய்வின் முடிவில், பல்வேறு ஆவணங்களை வருமான வரி துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகங்களில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது அங்கு நடைபெற்ற கலவரம் குறித்து பிபிசி இரண்டாவது ஆவணப்படம் வெளியிடப்பட்ட பிறகு இந்த வருமானவரி ஆய்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகளோ பிபிசியின் கணக்கு வழக்குகள் குறித்து பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் ஆனால் அதற்கு சரியான பதில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாள் வருமான வரித்துறை ஆய்வு முடிவடைந்த பிறகு இதுவரை வருமான வரித்துறை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரிட்டிஷ் அமைப்பான பிபிசி கணக்குகள் தொடர்பான ஆய்வு பல வருடங்களாக நடந்து வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சோதனை நடைபெற்ற போது பிபிசி அலுவலகங்களில் இருந்த ஊழியர்களின் அலைபேசிகள் மற்றும் கணினிகள் வருமானவரித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் பிபிசியின் செய்தி வெளியீடு சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது . நாங்கள் எங்கள் ஊழியரை ஆதரிக்கிறோம்.அவர்களில் சிலர் நீண்ட கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர் அல்லது இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மேலும் ஊழியர்களின் நலனே எங்கள் முன்னுரிமை. இந்தியாவில் பிபிசியின் செய்தி வெளியீடு சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிபிசி ஒரு நம்பகமான, சுதந்திரமான ஊடக அமைப்பாகும், நாங்கள் எங்கள் சக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம், அவர்கள் அச்சமின்றி அல்லது ஆதரவின்றி தொடர்ந்து செய்திகளை வெளியிடுவர் என்று பிபிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது