பாராமதியில் நகராட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாராமதியில் நகராட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி தொடங்கியுள்ளது. தொடர்ந்து இங்கு பவார் குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதால் பாராமதி பவார் கட்சிகளிடையே முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் இரண்டு கட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் போட்டி, குடும்பத்தின் தொடர்ச்சியான வெற்றி அத்தியாயத்திற்கு களம் அமைக்கிறது.
முன்னதாக, இந்த தொகுதியில் மக்களவைத் தேர்தலில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை வீழ்த்தி சுப்ரியா சுலே எம்பியானார். மறுபுறம், சட்டமன்றத் தேர்தலில் யுகேந்திர பவாரைத் தோற்கடித்து அஜித் பவார் வாகை சூடினார். ஆகையால் இந்த தொகுதி, பவாரின் குடும்பத் தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. இவ்விரு கட்சிகளும் அந்த தொகுதியில் சமபலத்தைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பவார் குடும்பத்திற்குள் ஒற்றுமையை அனைவரும் விரும்பினாலும், அது அவர்களின் கைகளில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சரத் பவாருடனான பாராமதியின் வரலாற்று தொடர்பைக் கருத்தில் கொண்டு, சிவசேனா (UBT), காங்கிரஸ் மற்றும் பிற சிறிய கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணி NCP (SP)க்கு அதிக இடங்களை ஒதுக்கியுள்ளது. இதற்கிடையே பாராமதியில் பாஜக தனது தாமரை சின்னத்தில் கிட்டத்தட்ட 30 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, இது நகரத்தின் உள்ளூர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். இந்த பாஜக வேட்பாளர்களில் பலர் முன்பு யுகேந்திர பவாருக்கு எதிரான அஜித் பவாரின் சட்டமன்ற பரப்புரையை ஆதரிப்பதற்காக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியின் தலைவரான சரத் பவாரின் மகள்தான் சுப்ரியா சுலே. மறுபுறம், சரத்பவாரின் மூத்த சகோதரர் ஆனந்த்ராவ் என்பரின் மகன்தான் அஜித் பவார். 2009-ஆம் ஆண்டு வரை, சரத் பவாருக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக அஜித் பவார்தான் வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அரசியலில் களமிறக்கப்பட, கட்சியில் சுப்ரியாவின் கை ஓங்கியது. இதையடுத்தே, அஜித் பவார் தன் ஆதரவாளர்களுடன் கடந்த 2023ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸை உடைத்து வெளியேறினார். தற்போது அவருடைய தலைமையிலேயே இந்தக் கட்சி இயங்கி வருகிறது. தவிர, அஜித் பவார் மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார். மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும், 2024 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. மறுபுறம், 2024 சட்டமன்றத் தேர்தலில் எதிர்த்தவர் யுகேந்திர பவார். இவர், அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவாரின் மகனான இவர், சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமானவர். சரத் பவாரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனமான வித்யா பிரதிஷ்டானின் பொருளாளராகவும், பாராமதி தாலுகா குஸ்திகிர் பரிஷத்தின் தலைவராகவும் உள்ளார். சுப்ரியா சுலேவிற்கு ஆதரவாக மக்களவைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசியலில் குதித்தார்.