மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு 9.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. அவருடைய மறைவுக்கு அரசியல் மற்றும் உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் அவருடைய சாதனைகளையும் புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், மன்மோகன் சிங் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக 2008 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதவிவகித்தவர் பராக் ஒபாமா. இவர், தனது அரசியல் வாழ்க்கையின் நினைவுகளைத் தொகுத்து, `எ பிராமிஸ்டு லேண்ட்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருந்தார். அதில் அவர் பதவியில் இருந்தபோது சம்பவங்கள், பல்வேறு நிகழ்வுகள் குறித்து எழுதியுள்ளார். அதில், தற்போது மறைந்த மன்மோகன் சிங் குறித்தும் புகழ்ந்து எழுதியுள்ளார்.
`எ பிராமிஸ்ட் லேண்ட்' புத்தகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி பராக் ஒபாமா குறிப்பிடுகையில், ``இந்தியப் பொருளாதார மாற்றத்தின் தலைமைச் சிற்பி மன்மோகன் சிங். அவர் முன்னேற்றத்தின் சின்னம். அடிக்கடி துன்புறுத்தல்களுக்கு ஆளான சீக்கிய மதச் சிறுபான்மை வகுப்பிலிருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். அவர் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, ஊழல் செய்யாததற்காக மக்களிடம் நற்பெயரைச் சம்பாதித்தவர்.
மன்மோகன் சிங், தனது சொந்த பிரபலத்தின் பலனாக பிரதமராகவில்லை. அவர் தனது பதவிக் காலத்தில், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும், கண்ணியமான தலைவராகவும் இருந்தார். நாகரிகமான மனிதரான அவர், சிறந்த அறிவாளி. இந்திய-அமெரிக்க உறவை, அவர் எச்சரிக்கையுடன் கையாண்டார்’’ என அதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.