கர்நாடக அரசால் தடை செய்யப்பட்ட அரசு உத்தரவில் வேறு எந்த மதச் சின்னமும் குறிப்பிடப்படவில்லை. ஹிஜாப் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது முற்றிலும் மதத்தின் அடிப்படையிலானது என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நான்காவது நாளாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், பேராசிரியருமான ரவிவர்ம குமார், "கல்வி நிறுவனம் சீருடையை மாற்ற நினைக்கும் போது, பெற்றோருக்கு ஓராண்டுக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கர்நாடக கல்வி சட்ட விதி தெரிவிக்கிறது. ஒருவேளை ஹிஜாப் மீது தடை இருந்தால், அது ஒரு வருடத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட வேண்டும்
கல்வியின் குறிக்கோள் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதாகும், எனவே வகுப்பறை என்பது பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் மற்றும் பிரதிபலிக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு மதத்தின் காரணமாக பாரபட்சம் காட்டப்படுகிறது" என தெரிவித்தார்
மேலும், "கர்நாடக அரசால் தடை செய்யப்பட்ட அரசு உத்தரவில் வேறு எந்த மதச் சின்னமும் குறிப்பிடப்படவில்லை. ஹிஜாப் மட்டும் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது ? முஸ்லீம் மாணவர்களுக்கு எதிரான இந்த பாகுபாடு முற்றிலும் மதத்தின் அடிப்படையிலானது, பல இந்தியர்கள் உடையின் மூலம் தங்கள் மத அடையாளத்தை காட்டுகிறார்கள். பாதி இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள், பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் பொதுவாக தங்களின் மத சின்னங்களை அணிகிறார்கள். பெரும்பாலான சீக்கிய ஆண்கள் நீண்ட முடியை வைத்திருப்பார்கள். ஆனால் அரசாங்கம் ஏன் ஹிஜாப் மீது மட்டும் என் இந்த விரோதப் பாகுபாட்டைச் காட்டுகிறது.
கர்நாடகாவில் 2014 இல் ஒரு சுற்றறிக்கையின் மூலம் அமைக்கப்பட்ட கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் (சிடிசி) மூலமாக எம்எல்ஏக்கள் கல்லூரி நிர்வாகத்தைக் கைப்பற்றுகிறார்கள். கல்லூரி வளர்ச்சிக் கவுன்சில் என்பது விதிகளின் கீழ் நிறுவப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆணையம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பல்கலைக்கழகத்துக்கு முந்தைய கல்லூரிகளுக்கு சீருடை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் அரசு உத்தரவு அறிவித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரிகள் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இருப்பினும், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப்களை கழற்றிவிட்டு வகுப்பறைக்குள் வருமாறு கூறியதால், பல இடங்களில் மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாகல்கோட், பெங்களூர், சிக்கபல்லாபுரா, கடக், ஷிமோகா, தும்கூர், மைசூர், உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.