சத்தீஸ்கர் மாநிலத்தில் கோழிப்பண்ணை தொடங்க கடன் வழங்குவதாகக் கூறி 39 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நாட்டுக் கோழிகளை லஞ்சமாக வாங்கி சாப்பிட்ட வங்கி மேலாளர் குறித்து புகார் எழுந்துள்ளது.
பிலாஸ்பூரி மாவட்டத்தில் உள்ள மஸ்தூரியைச் சேர்ந்த விவசாயி ரூப்சந்த் மன்கர், தனது கோழி வியாபாரத்தை விரிவுபடுத்தி கோழிப்பண்ணை அமைக்க நினைத்துள்ளார். அதற்கு அதிகளவில் பணம் தேவைப்பட்ட நிலையில், மஸ்தூரியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் கடன்வாங்க முடிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து எஸ்பிஐ வங்கியில் 12 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் கோரி விண்ணப்பித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி மேலாளரோ, 10% கமிஷன் கேட்டுள்ளார். இரண்டு மாதங்களில், தனது கோழிகளை விற்று வங்கி மேலாளர் கேட்ட கமிஷன்களை எல்லாம் விவசாயி கொடுத்த நிலையிலும், வங்கி மேலாளர் வங்கிக் கடன் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளார். மேலும், “ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு நாட்டுக்கோழியை வாங்கினார்; கோழிகளின் மொத்த மதிப்பு ரூ. 38,900. அதற்கான ரசீதுகள் கூட என்னிடம் உள்ளது” என்று விவசாயி தெரிவித்துள்ளார். வாங்கிய கோழிகளுக்கு வங்கி மேலாளர் பணம் கூட கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவிலேயே வங்கி மேலாளர் கடன்கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பதை விவசாயி புரிந்து கொண்டார். இத்தனை நாள் வங்கி மேலாளர் தன்னை ஏமாற்றியதையும் வங்கி மேலாளர் உணர்ந்து கொண்டார். இதன் காரணமாக, ஆத்திரமடைந்த விவசாயி ரூப்சந்த், கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார். வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோழி வாங்க செலவழித்த பணம் உட்பட, அனைத்தையும் திரும்பி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அப்படி இல்லை என்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்றும் தெரிவித்திருந்த நிலையில், அவரது பணம் திரும்பக் கிடைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.