இந்தியா

”அடங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லையே..” - பிக் அப் டெலிவரி சேவையை இப்படியும் யூஸ் பண்ணலாமா?

JananiGovindhan

அன்றாட வாழ்க்கையில் ஆன்லைன் சேவைகளை நம்பியிருப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. உணவு பொருட்கள் தொடங்கி வீட்டுக்குத் தேவையான மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவையை இருக்கும் இடத்திலிருந்தே ஆர்டர் செய்தால் போதும். எங்கு டெலிவரி செய்யப்பட வேண்டுமோ அங்கு டெலிவரி செய்யப்பட்டு விடும்.

அதன்படி  பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்காக பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் ஜீனி என்ற அம்சம் இருக்கிறது. அதேபோல டன்சொ என்ற நிறுவனம் இந்த சேவையை முழு நேரமாகவே செய்து வருகிறது.

இந்த சேவையின் மூலம் வீட்டில் செய்யப்பட்ட உணவுகளை கொடுத்து அனுப்புவது, பார்சல்கள், ஆவணங்கள் ஏன் சாவியை கூட இதன் மூலம் அனுப்ப முடியும். இதற்காக ஒருவர் மெனக்கெட்டு குறிப்பிட்ட இடத்துக்கு செல்வது தவிர்க்கப்படுவதால் பலரும் இது போன்ற பிக் அப் டெலிவரி சேவையை நாடி வருகிறார்கள். 

இப்படி இருக்கையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆப்பிள் வாடிக்கையாளருக்கு அந்த நிறுவனம் முறையாக பதிலும், விளக்கமும் அளிக்காததால் கடுப்பாகியிருக்கிறார். இதனால் நேரில் செல்ல முடியாமல் போனதால் அந்த நபர் ஸ்விக்கியின் ஜீனி அல்லது டன்சோவின் சேவையை அணுகி அந்த டெலிவரி ஊழியர் மூலம் பெங்களூரு Imagine Apple Store கிளையிடம் பேசியிருக்கிறார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. அதில், நடந்த சம்பவத்தை குறித்து ”இதுதான் Peak Bangalore செயல் என நினைக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த பிக் அப் டெலிவரி சேவையை இப்படியும் பயன்படுத்தலாமா என வியந்துப்போய் கமென்ட் செய்து அந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்தும் வருகிறார்கள்.

குறிப்பாக, “வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகுவதற்கு என்றே தனி ஸ்டார்ட் அப் நிறுவனமே தொடங்கலாம் போலவே” என்றும், “புத்திசாலித்தனமான ஐடியா” என்றும் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

- அருணா ஆறுச்சாமி, ஜனனி கோவிந்தன்