பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மறைந்ததை அடுத்து பெங்களூருவைச் சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரதமர் மோடிக்கு இரங்கல் கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதமும் அனுப்பியிருப்பதை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
குஷ்புவின் ட்வீட்டில், “இதுதான் உண்மையான அரசியல்வாதியின் பண்பு. இரண்டாம் வகுப்பு மாணவனின் இரங்கல் கடிதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்திருக்கிறார். இது அந்த மாணவனின் வாழ்க்கையில் சரியான திசையில் வழிநடத்த நல்ல வழியில் உதவும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ட்விட்டர் பதிவில் பகிரப்பட்ட சிறுவனின் கடிதத்தில் உள்ளவற்றை பார்க்கலாம்.
ஆயுஷ் ஸ்ரீவஸ்தா என்ற அந்த பள்ளி மாணவன் எழுதிய கடிதத்தில், “உங்கள் அன்புக்குரிய தாயார் ஹிராபென் தனது 100வது வயது மறைந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்தபோது வருத்தமாக இருந்தது. என்னுடைய இந்த இரங்கல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தாயாரின் ஆண்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி எழுதப்பட்ட சிறுவன் ஆயுஷின் கடித்தத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து கடந்த ஜனவரி 25ம் தேதி பதில் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், “என் தாயாரின் மறைவுக்கான இதயப்பூர்வமான இரங்கலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மாவின் இழப்பும் அது தரும் வலியை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. உங்களுடைய எண்ணத்திலும் பிரார்த்தனையிலும் என்னை இணைத்துக்கொண்டதற்கு நன்றி. என் தாயின் மறைவால் வந்த இழப்பை சமாளிக்க உங்களுடைய இரங்கல் கடிதம் வலிமையையும், தைரியத்தையும் கொடுக்கிறது.” என பிரதமரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சிறுவனின் கடிதமும், பிரதமர் மோடியின் பதில் கடிதமும் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், “பதவி, வயது, பொறுப்பு, அதிகார அமைப்பு என அனைத்தையும் கடந்து ஒரு நல்ல மனிதர் என்பதை பிரதமரின் பதிலிலேயே தெரிகிறது.” என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.