இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்துக்காக தயாரான அனைத்து வாகனங்களும் அதிரடி பறிமுதல்! ஏன்?

webteam

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வாகன அணிவகுப்பு, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு போலீஸ் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய குப்பம் தொகுதியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த நிலையில் குப்பம் அருகே இருக்கும் சாந்திபுரம் மண்டலம் கெனுமாரபள்ளி கிராமத்தில் இன்று பொதுமக்களுடன் அவருடைய உரையாடல் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் சுற்றுப் பயணத்தில் வாகன அணிவகுப்பு, பொதுக்கூட்டம் ஆகியவை நடத்த போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால் தடையை மீறி திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை நடத்த சந்திரபாபு நாயுடு முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதையடுத்து அணிவகுப்பிற்கு பயன்படுத்தப்பட இருந்த ஏராளமான வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் போலீசாருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாந்திபுரம் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவிற்கு நோட்டீஸ் வழங்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், சந்திரபாபு நாயுடுவை நெருங்கவிடாமல் போலீசாரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சி நடைபெறுமா அல்லது அவர் கைது செய்யப்படுவாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நெல்லூர் மற்றும் குண்டூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் மரணம் அடைந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்க இயலாது என்று போலீசார் கூறுகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் உயரதிகாரிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டு இருந்த சந்திரபாபு நாயுடுவை தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சந்திரபாபு நாயுடு அங்கிருந்து செல்ல இயலாது என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் சாஞ்சிபுரம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.