செய்தியாளர்: ராஜிவ்
நடிகர்கள் கமலஹாசன், ,சிலம்பரசன் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தக் லைஃப். இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 30ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது, தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என கமலஹாசன் பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது.
மேலும் திரைப்படம் திரையிட்டால் திரையரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படும் என கன்னட அமைப்புகள் சிலவும் எச்சரித்தனர்! இதனால் கர்நாடகாவில் மட்டும் இத்திரைப்படம் திரையிடவில்லை. இந்நிலையில் மகேஸ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை இன்று நீதிபதி பி.கே மிஸ்ரா அமரவில் விசாரணைக்கு வந்தபோது, திரையரங்கம் தீயிட்டு கொளுத்தப்படும் என கூறும் கன்னட அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடகா அரசு சரண் அடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
மேலும் திரைப்படம் என்பதைத் தாண்டி மொழி சிறுபான்மையினரை குறிவைத்து மிகப்பெரிய வன்முறையை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் இப்பிரச்னை உண்டாக்கப்படுவதாகவும் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து மனு மீது பதிலளிக்குமாறு கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.