இந்தியா

ரஜினியை நான் தவிர்த்தேன்... ஆனால் அவரோ... முதல் சந்திப்பு நினைவுகளை பகிர்ந்த மூத்த நடிகர்

PT

மலையாள மூத்த நடிகர் பாலச்சந்திர மேனன் நடிகர் ரஜினிகாந்தை முதன் முறையாக சந்தித்தது குறித்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

‘மனோரமா’விற்கு அவர் அளித்தப் பேட்டியில் இது குறித்து அவர் கூறும்போது “ பத்திரிகையாளராக இருந்தபோது ஒரு உணவகத்தில் முதன் முறையாக ரஜினியைச் சந்தித்தேன். அப்போது அவர் அந்த உணவகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர்களின் மத்தியில் நின்று கொண்டு சிகரெட்டை வாயில் பிடித்துக்காட்டி ஏதோ செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அங்கிருந்த ஒருவருடரிடம் அவர் யார் எனக் கேட்டேன். அதற்கு அவர், அந்த இளைஞன் சிகெரெட்டை வைத்து மாயாஜாலம் செய்து கொண்டிருப்பதாகவும், அவன் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அதன் பின்னர் அந்த இளைஞரை உணவு சாப்பிடும் போது ஒன்றிரண்டு முறை பார்த்தேன். ஒரு நாள் என்னிடம் வந்த அந்த இளைஞன் தனது பெயர் சிவாஜி ராவ் என்றும் தான் சினிமா சார்ந்து படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும் தான் சினிமாவில் நடிக்க விருப்பப்படுவதாகவும், தன்னை பற்றி உங்களது பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுத முடியுமா என்று கூறி சில புகைப்படங்களையும் என்னிடம் தந்தார். அவரது ஆர்வத்தை பார்த்த நான் அவரை பற்றி கட்டுரை எழுதி அதனுடன் அவரின் புகைப்படங்களையும் இணைத்து திருவனந்தபுரத்தில் இருந்த எனது பத்திரிகையின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினேன்.

ஆனால் அவர்களோ இவர் யார்..? இவருக்கு ஏன் நமது இதழில் இடம் ஒதுக்க வேண்டும்..? என்று கூறி கட்டுரையை வெளியிட அனுமதி மறுத்து விட்டனர்.  ஆனால் சிவாஜி ராவ் என்னிடம் கட்டுரை குறித்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் விரைவில் கட்டுரை வெளியிடப்படும் எனக் கூறி வந்த நான், அவரின்  நம்பிக்கையைச் சிதைக்க வேண்டாம் என்று அவரைச் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து வந்தேன்.

இந்நிலையில் ஒரு முறை அபூர்வ ராகங்கள் படத்திற்கான நேர்காணலுக்காக நடிகையை நேர்காணல் செய்ய சென்றிருந்தேன். அப்போது நடிகர் கமல் புகைப்படக்காரர்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் ஸ்ரீவித்யாவை நேர்காணல் செய்வதற்காக தயாரானேன். அப்போது ஒருவர் என்னை பின்னால் இருந்து அழைத்தார். நான் திரும்பி பார்த்தபோது அங்கு சிவாஜி ராவ் நின்று கொண்டிருந்தார்.

திடீரென்று என் முன்னே வந்து நின்ற சிவாஜி ராவ்வை பார்த்து அதிர்ச்சியில் இருந்த என்னிடம், சிவாஜி தனக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் இயக்குநர் பாலச்சந்தர் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை தந்துள்ளார் என்று கூறினார். உடனே கட்டுரை பற்றி பேச ஆரம்பித்த நான் எனக்கு மேலிடத்தில் அனுமதி கிடைக்காததால் கட்டுரையை வெளியிட முடியவில்லை என்றேன். அதற்கு அவரோ சினிமா வாழ்வில் இது இயல்பு என்று கூறினார். 

இதனைத்தொடர்ந்து ஸ்ரீ வித்யாவிடம் பேசிய நான் ” மொத்த வெளிச்சமும் கதாநாயகன் மீதே இருக்கிறதே, ஒரு புதுமுகத்துக்கு எந்த கவனமும் கொடுக்கப்படவில்லையே என்றேன். அதற்கு பதிலளித்த  அவர் இந்தப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் அவர் ஒரு நாள் நிச்சயமாக ஒரு முன்னணி கதாநாயகனாக மாறிவிடுவார் என்று கூறினார். அது பின்னாளில் உண்மையுமானது. என்று பேசினார்.