பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் இனி மாற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, உத்தரகண்ட் மாநிலத்தின் புனிதத்தையும் கலாச்சார மரபுகளையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக BKTC தலைவர் தெரிவித்தார். இந்த முடிவு, கோவில் கமிட்டியின் அடுத்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்படும்.
உத்ரகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதிகளில் அமைந்துள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய இரு கோவில்களும் இந்துக்களின் புனிதத்தலங்களுள் ஒன்றாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும் இக்கோவில்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இக்கோவில்களில் இனி இந்துக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மாற்று மதத்தினருக்கு அனுமதி கிடையாது எனவும் பத்ரிநாத் கேதார்நாத் கோவில் கமிட்டி (BKTC) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, BKTC தலைவர் ஹேமந்த் திவேதி, உத்தரகண்ட் மாநிலத்தின் "தேவபூமி" புனிதத்தையும், பழமையான கலாச்சார மரபுகளையும் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவு குறித்தான அதிகாரப்பூர்வ தீர்மானம் கோயில் கமிட்டியின் அடுத்த போர்டு கூட்டத்தில் நிறைவேற்றப்படும். மேலும், இவ்விரு கோவில்கள் மட்டும் இல்லாமல், BKTC-ன் கட்டுப்பாட்டில் உள்ள 45 கோவில்களுக்கும் இது பொருந்தும்” என தெரிவித்துள்ளார். மேலும், கோவில் நடை திறப்பது குறித்து ஏப்ரல் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக கேதார்நாத் பாதையில் இறைச்சி மற்றும் மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்தவும், ரீல்ஸ் மற்றும் வ்லாக் எடுக்கவும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாற்று மதத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில் கமிட்டியின் இந்த முடிவை அம்மாநில பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், இது பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.