கிளமெண்ட் அட்லியின் அறிவிப்பும் மவுண்ட்பேட்டனின் வருகையும்
1857-ஆம் ஆண்டின் முதல் இந்திய சுதந்திரப் போர் முதல் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற அகிம்சைப் போராட்டங்கள் வரை, இந்தியர்களின் தொடர் எதிர்ப்பால் பிரிட்டிஷ் அரசால் இனி இந்தியாவைத் தொடர்ந்து ஆள முடியாது என்ற சூழல் உருவானது. மேலும், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் விளைவாகப் பிரிட்டன் கடும் பொருளாதார மற்றும் இராணுவச் சரிவைச் சந்தித்ததால், உலகெங்கிலும் உள்ள தனது காலனி ஆதிக்க நாடுகளைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்து நின்றது.
இந்தச் சூழலில், 1945-ல் பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த கிளமெண்ட் அட்லி தலைமையிலான தொழிலாளர் கட்சி, இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதற்காக, 1947 மார்ச் மாதம் வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அதிகாரத்தை மாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
மவுண்ட்பேட்டன் திட்டம் மற்றும் ஜூன் 3 அறிவிப்பு
இந்தியா வந்த மவுண்ட்பேட்டன், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், முகமது அலி ஜின்னா, லியாகத் அலி கான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இறுதியாக, முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை ஏற்று 'மவுண்ட்பேட்டன் திட்டம்' (பிரிவினைத் திட்டம்) உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்குப் பிரிட்டிஷ் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற 1947 மே மாதம் லண்டன் சென்ற மவுண்ட்பேட்டன், ஒப்புதல் பெற்று ஜூன் மாதம் இந்தியா திரும்பினார். தொடர்ந்து 1947 ஜூன் 3-ஆம் தேதி, அகில இந்திய வானொலி வழியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிக்கப்படும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஜூன் 3 அறிவிப்பிற்கு அடுத்த நாளான 1947 ஜூன் 4 அன்று, மவுண்ட்பேட்டன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், "சுதந்திரத்திற்கான அதிகாரம் கைமாறும் தேதி ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது சற்றும் யோசிக்காமல் "ஆகஸ்ட் 15" என்று மவுண்ட்பேட்டன் பதிலளித்தார். இது குறித்து பின்னர் பேசிய மவுண்ட் பேட்டன், "உண்மையில் அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேதி அல்ல. செய்தியாளர் கேட்ட அந்த நொடியில், என் இராணுவ வாழ்க்கையின் மிக முக்கிய மைல்கல்லான ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15 என் நினைவுக்கு வந்தது. அதனால் உடனே அந்தத் தேதியை அறிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 15-ன் வரலாற்று முக்கியத்துவம்
இரண்டாம் உலகப் போரின் போது ஆசியப் பகுதிகளில் ஜப்பான் தீவிரமாக முன்னேறி, சிங்கப்பூர், மலேசியா, பர்மா (மியான்மர்) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் வடகிழக்கு எல்லை வரையிலும் ஊடுருவியது.
இந்த ஆபத்தான சூழலில், 1943-ல் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கான கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியாக மவுண்ட்பேட்டன் நியமிக்கப்பட்டார். பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட கூட்டுப் படைகளை ஒருங்கிணைத்து ஜப்பானின் ஆதிக்கத்தைத் தடுக்கும் பெரும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
மவுண்ட்பேட்டனின் தலைமையில் இந்திய-பிரிட்டிஷ் படைகள் இம்பால் மற்றும் கோஹிமா போர்களில் ஜப்பானைக் கடுமையாகத் தோற்கடித்தன. இது உலகப் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட முதல் பெரிய பின்னடைவாகும். தொடர்ந்து அந்தமான் தீவுகள், பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளை ஜப்பானியக் கட்டுப்பாட்டிலிருந்து மவுண்ட்பேட்டனின் படைகள் மீட்டன.
இறுதியில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து, 1945 ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானியச் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோ (Hirohito) முறைப்படி சரணடைவதாக அறிவித்தார். இதன் மூலம் இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. ஜப்பானின் வீழ்ச்சிக்குக் காரணமான தளபதியாக உலகம் முழுவதும் மவுண்ட்பேட்டன் கொண்டாடப்பட்டார். இதன் காரணமாகவே தனது இராணுவ வாழ்க்கையின் உச்சகட்ட வெற்றியைக் குறித்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியை இந்திய சுதந்திர தினமாக மவுண்ட்பேட்டன் தேர்வு செய்தார். இவ்வாறு ஒரு தனிநபரின் தற்செயலான முடிவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் வரலாற்றுத் திருப்புமுனை நாளாக அமைந்தது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.