உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 79 வயதான ஷெரிப் அகமது (Sharif Ahmad). இவர் கடந்த 1997-ம் ஆண்டு, தனது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மேற்கு வங்கத்திற்குப் புலம் பெய்ர்ந்து விட்டார். குடும்பச் சூழல் காரணமாக, அதன் பிறகு அவர் முசாபர்நகர் நகர் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. தன் மகள்கள் நிலை என என்றுகூட சிந்தித்துப் பார்க்கவில்லை. சுமார் 29 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாகவே அவரது குடும்பத்தினர் மற்றும் நான்கு மகள்கள் கருதி வந்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்காக (SIR - Special Intensive Revision), சில முக்கிய ஆவணங்களைச் சேகரிப்பதற்காக ஷெரிப் அகமது திடீரென டிசம்பர் 29 அன்று தனது சொந்த ஊரான கடோலிக்குத் (Khatauli) திரும்பியுள்ளார்.
இதுகுறித்து அவரது மருமகன் வாசிம் அகமது கூறுகையில், "நாங்கள் அவரைப் பல ஆண்டுகளாகத் தேடினோம். அவரது இரண்டாவது மனைவி கொடுத்த முகவரியை வைத்து மேற்கு வங்கம் வரை சென்று பார்த்தோம், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாகத் தொடர்பு இல்லாததால் அவர் உயிருடன் இல்லை என்றே நினைத்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஊருக்குத் திரும்பிய ஷெரிப் அகமது, தன் காலத்து நபர்கள் பலர் இறந்ததை அறிந்து வேதனை அடைந்தாராம். இருப்பினும், 29 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மீண்டும் பார்த்தது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
சிறிது நேர வருகைக்குப் பிறகு, ஆவணங்களைச் சேகரித்துக்கொண்டு ஷெரிப் அகமது மீண்டும் தனது குடும்பத்துடன் வசித்து வரும் மேற்கு வங்கத்தின் மேதினிபூர் மாவட்டத்திற்குத் திரும்பினார். எதற்குமே ஊர் பக்கம் எட்டிப் பார்க்காத மனிதர், ஓட்டுப்போட வேண்டும் என்றே ஒரே காரணத்துக்காக 29 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பியிருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பல மாநிலங்களில் SIRல் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க, ஒருவருக்கு 29 ஆண்டுகள் கழித்து, SIR மூலம் இப்படியொரு நன்மை நடந்திருக்கிறது.