குழந்தைக்கு குறைபாடு இருந்ததால் பெற்ற தாய், தந்தையே திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே அநாதையாக
விட்டு சென்ற கொடுமை நடந்திருக்கிறது.
திருமலையில் உள்ள வணிக வளாகம் அருகே, கடந்த 30ஆம் தேதி 1 வயது குழந்தை ஒன்று கவனிப்பாரின்றி அழுதுக்கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு அதன் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த வேலூர் மாவட்டம் நாயக்கநேரியை சேர்ந்த சுமதி என்பவர், அந்த குழந்தை தனது மகள் ஜெயந்தியின் மகன் என கூறி திருப்பதி காவல் துறையினரிடம் இருந்து குழந்தையை வாங்கி சென்றார். மேலும் தனது மகள் இறந்து விட்டதாகவும், குழந்தையின் தந்தைதான் இவ்வாறு செய்திருப்பார் எனவும் சுமதி கூறியுள்ளார்.
ஒரு வயது குழந்தையை அநாதையாக விட்டுச் சென்றதாக வழக்கு பதிந்து நாயக்கநேரிக்கு சென்று காவல் துறையினர்விசாரித்திருக்கின்றனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
குழந்தையின் தாய் ஜெயந்தி உயிரோடு இருந்திருக்கிறார். ஜெயந்தி காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் அவர் இறந்து விட்டதாக சுமதி கூறியது தெரியவந்துள்ளது. அதோடு தாய், தந்தையே குழந்தையை திருமலையில் விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. குழந்தை ரோகித்துக்கு அடிக்கடி வலிப்பு வருவதாலும், தலை நிற்காததாலும் இவ்வாறு செய்ததாக பெற்றோர் கூறியுள்ளனர். இதனை அடுத்து குழந்தையின் தாய், தந்தையான அருளையும், ஜெயந்தியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.