இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

JustinDurai

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

அயோத்தியில் 1992 ஆம் ‌ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் ‌பாரதிய ஜனதா மூத்த‌ தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மு‌ன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, முன்னாள் உ‌த்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட‌32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ‌இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்ப‌டும் என கட‌ந்த 16 ஆம் தேதி அறிவித்த சிபி‌ஐ சிறப்பு நீ‌திமன்ற நீதிபதி‌ எஸ்.கே.யாதவ், தீர்ப்பின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இதில் உமா பாரதியும், கல்யாண் சிங்கும் கொரோ‌னா தொ‌‌ற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா என்பது தெரியவில்லை.

முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கும்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அதன் பின், சிபிஐ நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் ஒரு மாதம் கெடு நீட்டிக்கப்பட்டது. இதனால், தினசரி இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

மொத்தமாக 351 சாட்சியங்கள், ஆதாரங்களாக 600 ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது. முதல் கட்டமாக 48 ‌பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்‌பட்டது. அதில் விசாரணையின் போதே 17 பேர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.