இந்தியா

''யூ ட்யூபர் ஏமாற்றி விட்டார்'' - ‘பாபா கா தாபா’ உணவக தாத்தா கொடுத்த புகார்..!

webteam

தலைநகர் டெல்லியில் ‘பாபா கா தாபா’ உணவகம் நடத்தி வரும் வயது முதிர்ந்த தம்பதிகள் காந்தா பிரசாத் மற்றும் பதாமி தேவி. தாங்கள் நடத்தி வரும் உணவகத்திற்கு யாருமே வருவதில்லை என மனம் உருகி பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதனையடுத்து நெட்டிசன்கள் அவர்களது உணவகத்தில் குவிந்து அவர்களது உணவக தொழிலுக்கு கைகொடுத்தனர். அவர்களது வாழ்க்கை கதையும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வரும் காந்தா பிரசாத் யூட்யூபர் கவுரவ் வாசன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்களுக்கு உதவுவதற்காக யூ ட்யூப் வீடியோ மூலம் திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக யூட்யூபர் கவுரவ் வாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாசன் எடுத்த வீடியோ வைரலாகி பலர் முதியவருக்கு நிதி அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேசிய பிரசாத், எனக்கு வாசன் ரூ.2 லட்சம் மட்டுமே கொடுத்தார். இப்போதெல்லாம் நிறைய வாடிக்கையாளர்கள் வருவதில்லை. பலர் செல்ஃபி எடுக்கவே வருகிறார்கள். வைரலானபோது ஒருநாளைக்கு ரூ.10ஆயிரம் வரை சம்பாதித்தேன். இப்போது ரூ.3ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வேண்டுமென்றே அவரது வங்கி விவரங்களை பகிர்ந்து கொண்டு மற்றும் நன்கொடையாக ஒரு பெரிய தொகையை சேகரித்தார் என வாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வாசன் முற்றிலுமாக மறுத்துள்ளார். தனக்கு கிடைத்த எல்லா பணத்தையும் பிரசாத் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும், நான் பிரசாத் வங்கி கணக்கை கொடுத்தால் பொதுமக்களால் தொல்லை ஏற்படும் என்பதால் என்னுடைய வங்கிக் கணக்கை கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பான ஆதாரங்களையும் அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 3 நாட்களில் 3.5 லட்சம் பணம் சேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில யூடியூப்பர்கள், வாசன் ரூ20 முதல் 25 லட்சம் வரை பெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளனர். அது குறித்து தெரிவித்துள்ள வாசன், என் மீது அவதூறு பரப்பும் யூ டியூப்பர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க போகிறேன் என தெரிவித்துள்ளார்