இந்தியா

சபரிமலை புறப்படும் ஐயப்ப பக்தர்களா நீங்கள்? இதனை படியுங்கள்!

jagadeesh

கார்த்திகை பிறந்தாலே வீடுகள்தோறும் சரணகோஷம் கேட்கத் தொடங்கும். மாதத்தின் முதல் நாளிலேயே மாலையணிந்து விரதத்தை தொடங்கும் ஐயப்ப பக்தர்கள், எப்பொழுது இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வோம் என்ற தவிப்பிலேயே இருப்பார்கள். 41 நாள் கடும் விரதம் இருந்து, கானகப் பாதையில் நடந்து சென்று, பொன்னு பதினெட்டாம் படியேறி, மேனியில் நெய் உருகும் ஐயப்பனை காணும் அந்த நொடி அனைத்து பக்தர்களுக்கும் பரவசம் தான்.

கடந்த சில ஆண்டுகளாக பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சபரிமலை சர்ச்சைகளில் சிக்கியது. எனினும் ஐயப்பனை கண்ணார காணும் வழிகள் பக்தர்களுக்கு அடைபடவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று, ஐயப்பனை காணும் பரவசத்திற்கு அணை போட்டிருக்கிறது. வார நாட்களில் ஆயிரம் பேர் வரையிலும், சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை தினங்களில் 2 ஆயிரம் பேர் வரையிலும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற கட்டுப்பாட்டால் பலர் சபரிமலைக்கு எப்படி செல்வது என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தவிர, புறப்படும் முன் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று, 24 மணி நேரத்திற்குள் நிலக்கல் வந்தடைய வேண்டும் என்ற விதிகளும் இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களை சோதனைக்குள்ளாக்கி இருக்கிறது. ஐயப்பனை காண வேண்டும், விதிகளை பின்பற்றி சபரிமலைக்கு செல்ல வேண்டும், அதற்கான வழிகளை தேடுபவர்களுக்காக சில விளக்கங்கள்.

முதலில் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டதும் தரிசனம் செய்ய வேண்டிய தேதியை ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும். இது தான் முதல் படி. அடுத்ததாக யாத்திரை புறப்படுவதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழை பெற்றிருப்பது அவசியம். அந்த சான்றிதழ் 24 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், உடனடியாக சபரிமலைக்கு புறப்பட்டு விடுவது சிரமங்களை தவிர்க்கும். ஒருவேளை 24 மணிநேரம் கடந்து விட்டால், கவலை இல்லை. நிலக்கல்லில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 625 ரூபாய் செலுத்தினால் போதும், அரை மணி நேரத்துக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்.

கார் போன்ற சிறிய வாகனங்களில் செல்லும் பக்தர்கள் பம்பை வரை அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும், பக்தர்கள் இறங்கிய பின், வாகனத்தை நிலக்கல்லில் பார்க்கிங் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் நிலக்கல் வரை செல்ல மட்டுமே கேரள காவல்துறை அனுமதியளிக்கிறது. அங்கிருந்து அரசு பேருந்தில் பம்பைக்கு பயணத்தை தொடரலாம். ஆண்டுதோறும், 10-க்கும் மேற்பட்டோருடன் குழுவாக செல்லும் வழக்கத்தை இந்த ஆண்டு கடைப்பிடிக்காமல் இருப்பது நல்லது. காரணம் குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். எனவே, மூன்று பேர் வரை செல்வதால் யாத்திரைக்கு பாதிப்பு ஏற்படாது.

பம்பையில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருமுடியுடன் முகக்கவசம் எடுத்து செல்வதையும் பக்தர்கள் மறக்கக் கூடாது. பாரம்பரிய நீலிமலை பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லை. சுப்ரமணிய பாதையில் பயணத்தை தொடர்ந்து மரக்கூட்டம் வழியாக சென்று, 18 ஆம் படியை பக்தர்கள் அடையலாம். நெய் அபிஷேகம் செய்வதற்கு அனுமதி இல்லை என்பதால், இருமுடியை பிரித்து, அதற்காக தனியே அமைக்கப்பட்டிருக்கும் நெய் சேகரிப்பு பாத்திரத்தில் பக்தர்கள் ஊற்றி விட வேண்டும்.

அதற்கு பதிலாக தேவஸ்வம்போர்டு விற்பனை செய்யும் அபிஷேகம் செய்த நெய்யை பிரசாதமாக பெற்றுக் கொள்ளலாம். தவிர அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை பெறுவதற்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடினமான விரதம் இருந்து காடு, மலை கடக்கும் ஐயப்ப பக்தர்களின் யாத்திரைக்கு, இந்த கட்டுப்பாடுகள் வெறும் சோதனைகள் தான். அவற்றையும் அவர்கள் நிச்சயம் கடப்பார்கள்.