sabarimalai
sabarimalai file
இந்தியா

திருக்கார்த்திகை தினம்: சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

webteam

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 68,000 பேரும் சனிக்கிழமை 70,000 பேரும் தரிசனம் செய்தனர். நேற்று இதைவிட பக்தர்கள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

sabarimalai

நேற்றைய சிறப்பு நிகழ்வாக ஐயப்பனுக்கு களபாபிஷேகம் மற்றும் உஷகளபாபிஷேகம் செய்விப்பதற்காக சந்தனம் மற்றும் குங்குமத்தால் நிறைக்கப்பட்ட தங்கத்தாலான பிரம்மகலசம் மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.

இதற்கிடையே பக்தர்கள் வசதிக்காக சன்னிதானம் அருகே 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முதலுதவியில் இருந்து அறுவை சிகிச்சை வரை கட்டணமின்றி மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. பாம்புக் கடிக்கான மருந்துகளும் இங்கு தயார் நிலையில் உள்ளன.

சன்னிதானம் தவிர நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகளும், நீலிமலை, அப்பாச்சிமேடு ஆகிய இடங்களில் இருதய சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. அதோடு பக்தர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க 15 அவசர மருத்துவ மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.