இந்தியா

அயோத்தி வழக்கு : சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை

webteam

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தீர்ப்பு வெளியாகும் தினத்தன்று நாட்டில் கலவரங்கள் அல்லது அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பதட்டமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் சட்டம் -ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் கண்காணிக்காவும், உளவுத்துறை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்கவும் உள்துறை கூறியுள்ளது.