அயோத்தியில் 2019ஆம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த உத்தரப்பிரதேச சுகாதரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதலே அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என பல இந்து அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் ராமர் கோயில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தார்த், முத்தலாக் முறையை தொடக்கத்தில் ஆதரித்தவர்கள், தற்போது எதிர்த்துள்ளனர் என்று கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்களும், தற்போது ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் வரும் 2019ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பும் அதற்கேற்றவாறு அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.