இந்தியா

அயோத்தி நிலம் வழக்கு: பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

rajakannan

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 8-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்திருந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், சுமார் 19,590 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அரசு சொசிலிட்டர் தாக்கல் செய்தார். 

சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், இத்தனை பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் எப்படி இவ்வளவும் சீக்கிரம் தாக்கல் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கை 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கபில் சிபில் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். வாதங்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.