இந்தியா

"அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் இல்லை" - சன்னி ‌வக்ஃபு வாரியம் முடிவு

webteam

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என மத்திய சன்னி ‌வக்ஃபு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கினை, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி
குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புக்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. பிறகு அதனை மறுத்தும் சில செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 7 உறுப்பினர்களில், ஆறு பேர் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் எனக் கூறியதாக அந்த அமைப்பின் தலைவர்  (Zufar Farooqi) சுஃபர் ஃபரூ‌க்கி தெரிவித்துள்ளார். மேலும் அரசு வழங்கவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்‌றும் அவர் கூறினார்.