நிருபேந்திர மிஸ்ரா. சாகேத் மிஸ்ரா
நிருபேந்திர மிஸ்ரா. சாகேத் மிஸ்ரா ட்விட்டர்
இந்தியா

அயோத்தி கோயில் பணியை முடித்துக்கொடுத்த தலைவர்: மகனுக்கு சீட் தந்த பாஜக.. யார் இந்த சாகேத் மிஸ்ரா?

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல்: 195 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்த பாஜக

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் எல்லாக் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து தொகுதிகளைப் பிரித்து வருகின்றன.

இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியிட்டது. அந்த வகையில், 195 இடங்களுக்கான இடங்களில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முக்கியக் காரணமாக இருந்த நபர் ஒருவருக்கும் பாஜக சீட் வழங்கியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் திறம்பட நிறைவேற்றியதில் ஆளும் பாஜக அரசுக்கும் பங்குள்ளது. அந்த வகையில், அயோத்தி ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளையின் கட்டுமான பிரிவு தலைவராக நிருபேந்திர மிஸ்ரா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இவருடைய மேற்பார்வையில்தான் அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணிகள் வேகம் பிடித்ததுடன், குறித்த நேரத்திலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

அயோத்தி கோயில் கட்டுமான பிரிவுத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிருபேந்திர மிஸ்ரா

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நிருபேந்திர மிஸ்ராவின் மகனுக்கு, பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இதுதான் பேசுபொருளாக உள்ளது. மத்திய அரசிலும், உ.பியிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிருபேந்திர மிஸ்ரா. இவர் ஐஏஎஸ் அதிகாரியாக ஓய்வு பெற்ற நிலையில் பிரதமர் மோடி அரசு அமைந்த பிறகு அவரது அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார்.

இதனால், பிரதமர் மோடிக்கும், அவருக்கும் நெருக்கமான உறவு உள்ளது. இத்தகைய சூழலில்தான் 2020-ல் அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணியில் அதன் அறக்கட்டளை மூலம் கட்டுமான பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதன்மூலம், சொன்ன நேரத்தில் வேலையைச் செய்துகொடுத்து மோடியிடம் நற்பெயரை எடுத்துள்ளார். மேலும் பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான அயோத்தி ராமர் கோயில் கட்டுவோம் என்பது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிருபேந்திர மிஸ்ரா

இந்நிலையில்தான் நிருபேந்திராவின் மகனுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிருபேந்திர மிஸ்ராவின் மகன் சாகேத் மிஸ்ரா பாஜகவில் செயல்பட்டு வருகிறார். ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று உத்தரப் பிரதேசத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட சாகேத் மிஸ்ரா, பின்னாளில் தனது பணியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, ஜெர்மனியின் டாய்ச் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

பின்னர், 2019 முதல் பாஜகவில் தீவிர அரசியல் பணியாற்றி வருகிறார். அந்த ஆண்டே ஆர் லோக்சபா சீட்டுக்கு முயற்சித்தபோதிலும், சாகேத் மிஸ்ராவுக்குக் கிடைக்கவில்லை. எனினும், அவரது உழைப்புக்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜக சார்பில் எம்எல்சி (மேல்சபை உறுப்பினர்) கிடைக்கப் பெற்றது. இந்த நிலையில்தான் அவர்மீது கட்சி மேலிடம் நம்பிக்கை வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள ஷ்ரவஸ்தி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. இதுதான் உ.பியில் ஒரே பேசுபொருளாக உள்ளது.

யார் இந்த சாகேத் மிஸ்ரா?

பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிருபேந்திர மிஸ்ராவின் மகனாக சாகேத் மிஸ்ரா இருந்தாலும், அவரது தாத்தா பண்டிட் பட்லுராம் சுக்லாவின் பேரனாக இன்னும் அறியப்படுகிறார். அவர் ஒரு மறைந்த அரசியல்வாதி. பஹ்ரைச்சின் புகழ்பெற்ற வழக்கறிஞரும்கூட. அத்தொகுதியில் அவர் ஆற்றிய சட்டப் பங்களிப்புகள் அதிகம். மேலும், பஹ்ரைச் மக்களவைத் தொகுதியின் முக்கியப் பிரமுகராகவும் விளங்கியவர். ஷ்ரவஸ்தி மக்களவைத் தொகுதி உருவாவதற்கு முன்பு, பிங்கா மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் பஹ்ரைச் மக்களவைத் தொகுதிக்குள்தான் இருந்தன.

சாகேத் மிஸ்ரா

அந்தவகையில், ஷ்ரவஸ்தி பகுதியில் நீண்டகால அரசியல் தொடர்புகளைக் கொண்டிருந்தார், பட்லுராம். அவருக்குப் பின்னர், அவருடைய குடும்பத்தில் இருந்து வேறு யாரும் அரசியலுக்கு வரவில்லை. தற்போதுதான் அவருடைய பேரன் சாகேத் மிஸ்ரா வந்துள்ளார். கல்வி, தொழில்முறை என அனைத்திலும் அவருடைய தாத்தாவையொற்றிய சாயல் இருப்பதாக அப்பகுதி மக்களிடம் பேசப்படுகிறது. இதன்காரணமாக, அந்தத் தொகுதியை சாகேத்துக்கு பாஜக ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையை சாகேத்துக்கும் வென்றெடுத்தும் வரும்காலத்தில் நாடாளுமன்றத்தில் நுழைவார் என பேசப்படுகிறது.