acharya satyendra das pt web
இந்தியா

“கண்கள் தெரியும் ராமர் சிலையின் படம் வெளியிட்டது தவறு”- அயோத்தி தலைமை அர்ச்சகர்

கண்கள் தெரியும்படி உள்ள ராமர் சிலையின் படம் வெளியிடப்பட்டது தவறு என்றும் இதை செய்தவர்கள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

PT WEB

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடுமுழுவதும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களும் அங்கு குவிவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயோத்தியில் உள்ள ராமர் சிலை

ராமர் கோயில் கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படவுள்ள 5 வயதுடைய ராமரின் சிலையை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 சிற்பிகள் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த 1 சிற்பி என 3 பேர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான நெல்லிக்காரி பாறையைக் கொண்டு 7 மாதங்களாக அயோத்தி வளாகத்தில் உருவாக்கப்பட்ட ராமரின் சிலை, கும்பாபிஷேகத்தின்போது பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் கண்கள் துணியால் கட்டப்பட்டுள்ள ராமர் சிலையின் படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவின. இதைத்தொடர்ந்து கண்கள் தெரியும் வகையில் உள்ள முழு சிலையின் படங்களும் வேகமாகப் பரவின.

இது குறித்து ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளதாவது, “பிரதிஷ்டை முடிவதற்குள் ராமர் சிலையின் கண்களை வெளிப்படுத்த கூடாது. அப்படி கண்கள் தெரிந்தால் யார் கண்களை வெளிப்படுத்தியது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறைகளும் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும். இருப்பினும் பிரான் பிரதிஷ்டா வரை ராமர் சிலையின் கண்கள் வெளிப்படுத்தப்படமாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.