இந்தியா

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி !

jagadeesh

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தி நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பல்லாண்டு கால சட்டப் போராட்டங்களுக்கு பின்னர், உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு, கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பில் மற்றொரு முக்கிய அம்சமாக, அயோத்தியில் முக்கிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ளவும் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் பிரமாண்டமாக அமையப்போகிற ராமர் கோயிலுக்கு பூமி பூஜை, வருகிற 5 ஆம் தேதி கோலாகலமாக நடக்கிறது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பூமி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது. பூமி பூஜை விழாவையொட்டி அயோத்தி நகரமே விழாக் கோலத்துடன் காட்சியளிக்கிறது. நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிப்பது காண்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.