இந்தியா

அயோத்தி தீர்ப்புக்குப் பின் அமைதி நிலவ பின்புலமாக இருந்த மத்தியஸ்த குழு 

அயோத்தி தீர்ப்புக்குப் பின் அமைதி நிலவ பின்புலமாக இருந்த மத்தியஸ்த குழு 

webteam

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் அமைதியுடன் ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் மத்தியஸ்த குழுவின் முயற்சிகளே அதிகம் இருந்தது தெரிய வந்துள்ளது.

அயோத்தி நில பிரச்னையில் இருதரப்பிடையே சுமூகமான முடிவு ஏற்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அமைத்தது. இருதரப்பின் முக்கியத் தலைவர்களையும் அழைத்து மத்தியஸ்த குழு சமரசப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது.

அதன்படி, கடந்த மே மாதம் அந்தக் குழு இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தொடர்ந்து இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்திய மத்தியஸ்த குழு, தங்களால் சமரசம் ஏற்படுத்த முடியவில்லை என கூறி, சீலிடப்பட்ட உறையில் பேச்சுவார்த்தை மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது.‌ இருப்பினும், மத்தியஸ்த குழுவுக்கு பாராட்டு தெரிவித்த உச்ச நீதிமன்றம், எந்தச் சூழ்நிலையில் தீர்வு எட்டப்பட்டாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. ‌

தொடர்ந்து மத்தியஸ்த குழு மேற்கொண்ட சமரசத்தால், சர்ச்சைக்குரிய இடத்தை சமமாக பங்கிட்டுக்‌கொள்ள சன்னி வக்பு வாரியம் முன்வந்ததாக கடந்த அக்டோபர் மாதம் தகவல் வெளியானது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் இறுதி நாளில், மத்தியஸ்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. தீர்ப்பு வெளியாவதற்கு முன், பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் மத்தியஸ்த குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

தீர்ப்பு எவ்வாறாக இருந்தாலும் அதனை அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதத் தலைவர்களை சந்தித்து மத்தியஸ்த குழுவினர் பேசினர். தீர்ப்புக்கு பின்னும் அமைதி நி‌லவ இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.