இந்தியா

ஆவ்னி புலி வேண்டுமென்றெ கொல்லப்பட்டதா..? பிரேத பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன.?

ஆவ்னி புலி வேண்டுமென்றெ கொல்லப்பட்டதா..? பிரேத பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன.?

Rasus

மகாராஷ்டிராவில் ஆவ்னி புலி திட்டுமிட்டு தான் சுட்டுக்கொல்லப்பட்டதா..? என்ற சந்தேகம் நிலவுகிறது. பிரேத பரிசோதனை முடிவுகளும் அதற்கேற்ப உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதி பந்தர்காவாடா. அங்கு வனத்துறையினரால் ஆவ்னி என பெயரிடப்பட்டுள்ள பெண் புலி அண்மையில் மேன் ஈட்டராக மாறி, 13 பேரை கொன்று தின்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து ஆவ்னி புலி கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டது. இது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோகம் ஓய்வதற்குள் கிராம மக்களே சேர்ந்து புலி ஒன்றை அடித்துக் கொன்ற சம்பவமும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியது.

ஆவ்னி புலி தாக்க வந்த நேரத்தில் தற்பாதுகாப்புக்காகத் தான் சுட்டுக் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிரா வனத்துறை சார்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டது. அதாவது புலிக்கு மயக்க மருந்து செலுத்தி பிடிப்பதற்காக குழுக்கள் சென்ற நேரத்தில் புலி அவர்களை தாக்க வந்ததால் சுமார் 8-10 மீட்டர் தொலைவிலிருந்து புலி சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் புலியிடம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகள் வேறு முடிவை காட்டுகின்றன. 4 கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், புலி கொல்லப்படும் நேரத்தில் அதன் முன்பக்கத்தை குறிவைத்து குண்டு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

புலியின் ஒரு பக்கத்தில் துளைத்த குண்டானது மறுபக்கம் வழியே வெளிவந்துள்ளது. குண்டானது புலியின் பின்பக்கத்தில் இருந்து சென்றிருக்கிறது. அப்படியிருக்க புலி எப்படி அவர்களை தாக்க வந்திருக்கும் என்ற சந்தேகம் நிலவுகிறது. வேறு எங்கேயோ சென்ற புலியை வேண்டுமென்றே மறைமுகமாக பின்னால் இருந்து சுட்டுக் கொன்றார்களா..? என்ற சந்தேகமும் நிலவுகிறது. மயக்க மருந்து கொடுத்து பிடிக்க திட்டமிடாமல், வேண்டுமென்று புலியை திட்டமிட்டு கொன்றார்களா..? என்ற சந்தேகமும் எழுகிறது. புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிரா வனத்துறை சார்பில் விசாரணைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.