அவிமுகேஷ்வரானந்த், யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளம்
இந்தியா

மகா கும்பமேளா விபத்து | யோகி ஆதித்யாத்தைக் கடுமையாகச் சாடிய சங்கராச்சார்யா அவிமுகேஷ்வரானந்த்!

மகா கும்பமேளா விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, ஜோஷிமத்தின் சங்கராச்சார்யா அவிமுகேஷ்வரானந்த் சரஸ்வதி கடுமையாகச் சாடியுள்ளார்.

Prakash J

உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, 3 நதிகள் சங்கமிக்கும் இந்த திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, கடந்த ஜன.29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, இதன் எண்ணிக்கை அதிகமானது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

மகா கும்பமேளா, யோகி

மெளனி அமாவாசை என்பதால் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதும், தடுப்புகளை உடைத்து திரிவேணி சங்கமத்தை நோக்கி, பக்தர்கள் பெருமளவில் திரண்டு சென்றதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த துயர நிகழ்வு குறித்து நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மறுபுறம், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த நிலையில், மகா கும்பமேளா விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, ஜோஷிமத்தின் சங்கராச்சார்யா அவிமுகேஷ்வரானந்த் சரஸ்வதி கடுமையாகச் சாடியுள்ளார்.

செய்தி சேனலிடம் பேசிய ஜோஷிமத்தின் சங்கராச்சார்யா அவிமுகேஷ்வரானந்த் சரஸ்வதி, “விபத்து நடைபெற்றதை, யோகி ஆதித்யநாத் அப்பட்டமாக மறைத்துள்ளார். எங்களுக்கு தவறான தகவலைத் தந்தனர். இதனால், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் ராஜ ஸ்நானம் செய்தனர். இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. யோகியை உடனே முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் இங்கு வரப்போகிறார்கள். அவர்களால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை.

மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் முழுமையடையவில்லை. மக்களின் வாழ்க்கையோடு விளையாடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் யோகி அரசு பெரும் தோல்வி அடைந்துள்ளது. அப்படிப்பட்ட அரசுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருக்க தார்மிக உரிமை இல்லை. அதனால் அரசு தானாகப் பதவி விலக வேண்டும். இல்லையேல் பொறுப்புடையவர்கள் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

அவிமுகேஷ்வரானந்த் சரஸ்வதி

இவருடைய கருத்துக்கு அகில பாரதிய அகாரா பரிஷத் மற்றும் மானசா தேவி கோயிலின் தலைவர் ஸ்ரீ மஹந்த் ரவீந்திர புரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ”இதுபோன்ற விவகாரங்களில் அறிக்கை வெளியிடுபவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். அத்தகையவர்களை நியாயமான இடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும். அகில பாரதீய அகாரா பரிஷத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை போலி சங்கராச்சாரியார் என்று அறிவிக்கிறது. அரசு மற்றும் நிர்வாகத்தை இழிவுபடுத்துவது எளிது. ஆனால் 10 முதல் 11 கோடி பக்தர்களை கையாள்வது கடினம்” எனத் தெரிவித்துள்ளார்.