மனிதகுலத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி, அன்னை மிர்ரா அல்பாசாவால் உருவாக்கப்பட்ட கனவு நகரம் தான் ஆரோவில். புதுச்சேரி- தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள இந்த நகரில், மத, அரசியல் கோட்பாடுகளைத் தாண்டி, 121 நாடுகளிலிருந்தும், 25 மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நகரத்தின் கட்டுமானத்தில் மத்திய மோடி அரசு அதிக ஆர்வம் காட்டிவருகிறது. குறிப்பாக, ஆரோவில் அறக்கட்டளைக்கான நிதி ஒதுக்கீடு 8 கோடி ரூபாயில் இருந்து 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோவில் நகரத்தில், இந்திய கலாச்சாரத்தையும், சனாதன கொள்கைகளையும் வெளிநாட்டவர்களுக்கு எடுத்துரைப்பதில் மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 2021 முதல் ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரவிந்தர் மார்க்கத்தின் வழியாக சனாதன கோட்பாடுகளை சர்வதேச குடிமக்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகிறார்.
ஆரோவில் நகரத்தில் உள்ள மொத்த பரப்பளவில் 0.4% மட்டுமே உட்கட்டமைப்புக்காக மரங்கள் வெட்டப்பட்டதாகவும், அதற்கு ஈடாக இரண்டு மடங்கு மரங்கள் நடப்பட்டு வருவதாகவும் ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார். ஆரோவில் நகரம் மூலமாக இந்திய கலாச்சார மரபை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லும் பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது.