நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடந்து வரும் நிலையில், சில இடங்களில் விஷமிகள் அமைதியை குலைத்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களிடம் அத்துமீறியதுடன், மத நல்லிணக்கத்தை குலைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
டெல்லி லஜ்பத் நகரில் கிறிஸ்துமஸ் பாடல்களை குழந்தைகளுடன் பாடிச் செல்லும்போது பஜ்ரங் தளம் அமைப்பினர் தங்களை வழிமறித்து மிரட்டியதாக பெண்கள் குற்றஞ்சாட்டினர். ஒடிஷாவில் வீதியோரங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை விற்ற வியாபாரிகளிடம், "இது இந்து ராஷ்டிரம், கிறிஸ்தவர்களுக்கு அனுமதி இல்லை" எனக் கூறி ஒருவர் ஆக்ரோஷமாக மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பாஜக நிர்வாகி அஞ்சு பார்கவா கிறிஸ்தவரான பார்வை மாற்றுத் திறனாளிப் பெண்ணைத் தாக்கியதோடு, அவரது பார்வையின்மையை மதத்துடன் இணைத்து இழிவாகப் பேசியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உத்ராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள அரசு ஹோட்டலில் திட்டமிடப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் விழாக்கள், இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டன.
கேரளத்தின் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் பாடல் பாடிச் சென்ற சிறுவர்கள் மீது ஆர்.எஸ். எஸ் தொண்டர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். சிறுவர்கள் மது அருந்தியிருந்தனர் என்று இதை நியாயப்படுத்திய பாஜக தலைவருக்கு, பெற்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட இந்த சவால்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; வன்முறையைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.