இந்தியா

பெங்களூரு சிறையில் கைதிகள் மீது தாக்குதல்: விசாரணை நடத்த டிஐஜி ரூபா கோரிக்கை

webteam

சசிகலா தண்டனை அனுபவித்து வரும் பெங்களூரு சிறையில், மிக முக்கிய நபர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை பற்றி தகவல் அளித்த கைதிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி குற்றத்தை நிரூபித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, “பெங்களூரு சிறையில் இருந்து ஏராளமானோர் காயங்களுடன் நகரும் நாற்காலியில் வேறு சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையின் மூலம், கைதிகளின் உரிமை மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைதிகள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. அதன் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.