மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் அவருக்கு இன்று நினைவிடம் திறக்கப்பட்டது.
முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் வாஜ்பாயின் 94ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி ராஜ்காட் அருகே ஒன்றரை ஏக்கர் பரப்பில், 10 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் வாஜ்பாய்க்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ‘சதைவ் அதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள வாஜ்பாயின் நினைவிடம், அவரின் 94ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று திறக்கப்பட்டது.
வாஜ்பாய் நினைவிட திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நினைவிட திறப்பு விழாவையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கவிஞர், மனிதநேயமிக்கவர், சிறந்த நிர்வாகி என வாஜ்பாயின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். மேலும் வாஜ்பாயின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டிருந்தார்.