பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ராமாயணா நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 700 நெருங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகள், முதியவர்கள், பொது மக்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மொபைல் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராமாயணா நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்நிகழ்ச்சி மார்ச் 28 அதாவது நாளை டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். நிகழ்ச்சியின் ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மற்றொரு பகுதி மாலை 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.