உலகின் ஆன்மா சூரியந்தான் என்று வேதங்கள் கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தலைமையாகக் கொண்ட சர்வதேச சூரிய மின்சக்தி நேசக் கூட்டணியின் முதல் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்றுப் பேசிய மோடி, சூரிய சக்தி மின்சாரத்தை, கட்டுப்படியாகக் கூடிய விலையில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தும் விதமாக பத்து அம்ச செயல்திட்டம் ஒன்றை அறிவித்தார். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டி, அதன் மூலம் ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இலக்கை அடைய சலுகையுடன் கூடிய நிதி உதவி தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் வரும் 2022-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 175 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகின் ஆன்மா சூரியன்தான் என்று வேதங்கள் கூறுவதாகவும் மோடி சுட்டிக்காட்டினார். ஆகவே, வேதத்தில் கூறப்பட்டிருப்பது போன்ற பழங்கால சிந்தனையின் படி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றார். சர்வதேச சூரிய மின்சக்தி நேசக்கூட்டணியில் இந்தியாவுக்கு உள்ள அர்ப்பணிப்பை காட்ட, உறுப்பு நாடுகளில், 500 பயிற்சி அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.