முர்ஷிதாபாத் மருத்துவமனை
முர்ஷிதாபாத் மருத்துவமனை twitter
இந்தியா

மேற்கு வங்கம் | ஒரே நாளில் சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் இறப்பு... அதிர்ச்சி பின்னணி!

Jayashree A

மேற்கு வங்கத்தில் உள்ளது முர்சிதாபாத் மருத்துவக்கல்லூரி. இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் (பிறந்து சிலமணிநேரங்கள் மற்றும் சில நாட்களே ஆனவர்கள்) சுமார் 10 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊட்டச்சத்து மற்றும் எடை குறைவான இக்குழந்தைகளை மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூரில் உள்ள SNCU என்ற மருத்துவமனையிலிருந்து முர்ஷிதாபாத் மருத்துவக்கல்லூரிக்கு சமீபத்தில் மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து முர்ஷிதாபாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வரும் பேராசிரியருமான அமித் டான் கூறுகையில் “ஜாங்கிபூர் துணைப்பிரிவு மருத்துவமனையில் பொதுப்பணித்துறை பணிகள் நடைபெற்று வருவதால், சிகிச்சைக்கான போதிய வசதி இல்லாமல் இருந்துள்ளது. அதனால்தான் அக்குழந்தைகள் அங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டனர். மேலும் மாற்றப்பட்ட குழந்தைகள் அனைவரும் ஏற்கெனவே எடை குறைவானதாகவும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளாகவும் இருந்தனர்.

குழந்தைகள் அனைவரையும் ஜாங்கிபூரிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு குறைந்தது 5-6 மணி நேரம் வரை ஆகிவிட்டது. இதுபோன்ற காரணங்களால், எடைகுறைபாடுடைய இக்குழந்தைகளை காப்பாற்றுவது கடினமாகிவிட்டது.

மேலும், இங்கு ஏற்கனவே அதிக அளவு நோயாளிகள் இருந்ததாலும், இக்குழந்தைகளின் திடீர் வருகையாலும் மருத்துவர்களிடையேயும், மருத்துவமனை அளவிலும் பெரும் நெருக்கடியை அச்சமயத்தில் ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.