இந்தியா

குடும்ப வறுமையை போக்க போராடும் சுமை தூக்கும் பெண் தொழிலாளி 

குடும்ப வறுமையை போக்க போராடும் சுமை தூக்கும் பெண் தொழிலாளி 

webteam

குடும்ப வறுமையை போக்க ரயில்நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். 

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(30). இவருடைய கணவர் போபால் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் உடல்நல குறைவால் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். இந்தத் தம்பதிக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆகவே கணவரை இழந்து வாடும் இந்தக் குடும்பத்தின் வறுமையை போக்க லட்சுமி ஒரு முடிவு எடுத்துள்ளார். 

அதாவது லட்சுமி தனது கணவர் பார்த்து வந்த சுமை தூக்கும் தொழிலை தொடர நினைத்தார். எனவே அவரின் 13ஆம் நம்பர்  தொழிலாளர் பேட்ஜ் அணிந்து போபால் ரயில் நிலையத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். பரப்பரப்பாக இயங்கும் ரயில் நிலையத்தில் மக்களின் கூட்டத்திற்கு நடுவில் பெட்டிகளை தனது கைகள் மற்றும் தலையில் சுமந்து லட்சுமி பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவர்  ‘தி இந்துஸ்தான் டைம்ஸ்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “எனக்கு வேறு வழி இல்லாததால் கணவரின் வேலையை தொடங்க ஆரம்பித்தேன். ஏனென்றால் நான் எனது மகனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இந்த வேலை மிகவும் கடினமான வேலை தான். எனினும் என்னுடைய மகன் படிப்பை முடிக்கும் வரை நான் இதுபோன்ற வேலையை செய்துதான் ஆகவேண்டும். இந்த வேலையின் மூலம் ஒருநாளைக்கு 50 முதல் 100 ரூபாய் கிடைக்கும். இந்த வேலை நிரந்தரமானது இல்லை. ஆகவே எனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும். அத்துடன் ஒரு நிரந்தர ஊதியம் கிடைத்தாலும் நன்றாக இருக்கும். இந்த வேலையில் சில நாட்கள் ஊதியமே கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்த ரயில் நிலையத்தில் லட்சுமியுடன் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளி பிரஜாபதி, “சில முறை லட்சுமியை பார்த்து, அவரால் இந்த பெட்டிகளை தூக்க முடியாது என்று சில மக்கள் கூறுவார்கள். நாங்கள் அவர்களிடம் லட்சுமியின் குடும்ப சூழல் குறித்து கூறி அவர்களின் பெட்டியை லட்சுமியை தூக்க வைப்போம். அத்துடன் நாங்கள் பெட்டிகளை தூக்கி செல்லும் போது, சுமை அதிகமாக இருந்தால் சிலவற்றை லட்சுமிக்கு அளிப்போம். அந்தச் சமயத்தில் வரும் ஊதியத்தை பகிர்ந்து கொள்வோம். லட்சுமிக்கு அரசு வேலை ஒன்று தரவேண்டும் என்று நாங்கள் மத்திய பிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளோம்.

இந்த ரயில்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் சிலர் பெண் ஒருவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். ஆகவே சமுதாயத்தில் பெண் ஒருவர் தனியாக தனது சொந்த கால்களில் நின்று குடும்பத்தை நடத்த முடியும் என்பதற்கு லட்சுமி முன்னுதாரணமாக திகழ்கிறார்” எனக் கூறியுள்ளார்.