இந்தியா

2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத்தலைவர்: யார், யாருக்கு விருது?

JustinDurai
டெல்லியில் நடைபெற்ற விழாவில், 119 பேருக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.
கலை, இலக்கியம், சமூகப் பணி என பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தின விழாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பத்ம விருதுகள் 119 பேருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 10 பேருக்கு பத்ம பூஷண், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அவர்களில் 16 பேருக்கு மறைந்த பிறகு வழங்கப்பட்டுள்ளது. பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களில் 29 பேர் பெண்கள்.
பத்ம விபூஷண் விருது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இந்துஸ்தானி பாடகர் சானூலால் மிஸ்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்த மேரி கோமுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மகன் உத்பால் பாரிக்கர் பெற்றுக் கொண்டார்.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சமூக செயற்பாட்டாளர் பிரகாஷ் ஜோஷி, மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் டாக்டர் ஜமீர், ஆன்மிகவாதி மும்தாஜ் அலி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், வேணு ஸ்ரீநிவாசன் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் கோபால் மகேந்திராவுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சாந்தாலி மொழி இலக்கியவாதி தமயந்தி பேஷ்ரா, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை சரிதா ஜோஷி, இசையமைப்பாளர் அட்நன் சமி கான் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
பத்ம ஸ்ரீ விருதை பொறுத்தவரை தமிழகத்தின் தென்காசியை சேர்ந்த ஆயக்குடி அமர்சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப், ஷேக் மெஹபூப் சுபானி, ஓவியக் கலைஞர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சமூக பணியில் சிறந்து விளங்கிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி துளசி கவுடா, பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் செவ்வாய்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, கூடைப்பந்து விளையாட்டில் சாதித்த அனிதா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்படுகிறது.